Monday, December 29, 2008

கீழ்வெண்மணியைப் பற்றி பெரியார்

12.1.69 அன்று செம்பனார் கோவிலில் அவர் ஆற்றிய
சொற்பொழிவிலிருந்து (விடுதலை 20.1.69) :

"தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள்
விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல
அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை
எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல
மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை
உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள்
கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை
ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள்.
கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல.
இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில்
ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி
உயர்வு - பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான்
கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.
தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற
பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும்
என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக்
கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும்
ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி,
இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும்
சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற
முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத்
தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம்
கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை
தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட்
கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று
அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான
நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.நாட்டில்
அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட்
கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு
இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை
எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப்
பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத்
தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக்
கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை
பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது.
அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு
தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த
அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.''