Tuesday, March 3, 2009

“பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்...” : லசந்த விக்ரமதுங்க

http://www.kalachuvadu.com/issue-110/page26.asp

"பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்..."

லசந்த விக்ரமதுங்க

தமிழில்: கவிதா

எந்தத் துறையும் அதில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியின் பொருட்டு உயிரை
விட வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை - ஆயுதப் படைகளையும் இலங்கையில்
ஊடகத் துறையையும் தவிர. கடந்த சில வருடங்களாக சுதந்திரமான ஊடகத் துறை
தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகிறது. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி
நிறுவனங்கள் கொளுத்தப்படுகின்றன, குண்டுவைத்துத் தகர்க்கப்படுகின்றன,
சீல்வைத்துப்
பூட்டப்படுகின்றன அல்லது அதிகாரத்துக்கு இணங்கும்படி வற்புறுத்தப்படுகின்றன.
கணக்கற்ற ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள்;
கொல்லப்படுகிறார்கள். இந்த எல்லாப் பிரிவுகளிலும் குறிப்பாகக் கடைசிப் பிரிவில்
நானும் இருக்கிறேன் என்பதை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகிறேன்.

நான் ஊடகத் துறையில் மிக நீண்டகாலம் பணிபுரிந்து வருகிறேன். சொல்லப்போனால்
2009 தி சண்டே லீடரின் 15ஆம் வருடமாக இருக்கும். இலங்கையில் இந்தக்
காலகட்டத்தில் நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. பெரும்பான்மையான இந்த
மாற்றங்கள் மோசமாகத்தான் இருந்திருக்கின்றன என்பதை நான் உங்களுக்குச்
சொல்லத் தேவையில்லை. இப்போது நாம் ஒரு உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில்
இருக்கிறோம். அதை நடத்திக்கொண்டிருப்பவர்களின் ரத்தவெறி எல்லையற்றது.
பயங்கரவாதம், அதைச் செலுத்துபவர்கள் பயங்கரவாதிகளாக இருந்தாலும் அரசாக
இருந்தாலும் தினசரி விஷயமாகிவிட்டது. விடுதலையின் ஆதாரங்களை அடக்கி
ஆளும் முக்கிய வழிமுறையாகக் கொலை இங்கு அரசால் பயன்படுத்தப்பட்டுக்
கொண்டிருக்கிறது. இன்று ஊடகவியலாளர்களை; நாளை நீதிபதிகளையும். இரண்டு
தரப்புக்குமே இப்போதுபோல எப்போதும் ஆபத்துகள் அதிகமாக இருந்ததில்லை.
பின்விளைவுகள் இப்போதைவிடக் குறைவாகவும் இருந்ததில்லை.

பிறகு ஏன் நாங்கள் இதைச் செய்கிறோம்? அதைப் பற்றி நான் அடிக்கடி நினைத்துப்
பார்ப்பதுண்டு. நானும் ஒரு கணவன்; எனக்கு அழகான மூன்று குழந்தைகள் உண்டு.
எனது துறையையும் மீறிய பொறுப்புகளும் கடமைகளும் எனக்கு இருக்கின்றன.
இந்த ஆபத்து தேவையா? இல்லை என்றே நிறையப் பேர் என்னிடம் சொல்கிறார்கள்.
எனது துறையை மாற்றி வழக்கறிஞர் பணிக்குத் திரும்பும்படி நண்பர்கள்
சொல்கிறார்கள்; அது பாதுகாப்பான, இதைவிட நல்ல வாழ்க்கை முறையைத்
தரும் என்பது எனக்குத் தெரியும். இரண்டு தரப்புகளையும் சேர்ந்த
அரசியல்வாதிகளும் என்னை அரசியலில் சேருமாறு வற்புறுத்துகிறார்கள்;
எனக்குப் பிடித்த துறையில் அமைச்சராக்குவதாக உத்தரவாதம் தருகிறார்கள்.
இலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு இருக்கும் ஆபத்துகளை உணர்ந்திருக்கும்
தூதரக அதிகாரிகள் அவர்களது நாடுகளில் தங்கு வதற்கான உரிமையைத்
தருவதாகவும் பாதுகாப்பான பயணத்துக்கு ஒழுங்குசெய்வதாகவும் சொல்கிறார்கள்.
எனக்குப் பல தடைகள் இருந்தாலும் என் முன்னிருக்கும் வாய்ப்புகள் பல.

ஆனால் பதவி, புகழ், பணம், பாதுகாப்பு ஆகியவற்றைத் தாண்டிய ஒரு
'அழைப்பு' இருக்கிறது. அது மனசாட்சியின் குரல்.

தி சண்டே லீடர் பிரச்சினைக்குரிய பத்திரிகையாக இருப்பதற்குக் காரணம்,
நாங்கள் எதைப் பார்க்கிறோமோ அதை அப்படியே சொல்கிறோம். கொலை,
கொள்ளை எதுவாக இருந்தாலும் அதை அந்தப் பெயரிட்டே அழைக்கிறோம்.
வார்த்தை ஜாலங்களுக்குப் பின் நாங்கள் ஒளிந்துகொள்ளவில்லை.
எங்களுடைய புலனாய்வுக் கட்டுரைகளுக்கு ஆதாரமாகச் சமூகப் பொறுப்புணர்வு
கொண்ட குடிமக்கள் தரும் ஆவணங்கள் இருக்கின்றன. அவர்கள் பல
ஆபத்துகளுக்கிடையில் அதை எங்களுக்குத் தருகிறார்கள். நாங்கள் தொடர்ந்து பல
ஊழல்களை வெளிப்படுத்தியிருக்கிறோம். இந்தப் பதினைந்து வருடங்களில்
ஒருமுறைகூட எங்கள்மீது யாரும் வெற்றிகரமாக வழக்குத்தொடர்ந்தது இல்லை
அல்லது நாங்கள் சொன்னது தவறு என்று அம்பலப்படுத்தியதில்லை.

மஸ்காராவும் ஸ்டைலிங் ஜெல்லும் இல்லாமல் தனது முகத்தைச் சமூகம்
பார்க்கக்கூடிய ஒரு கண்ணாடியாகச் சுதந்திரமான ஊடகம் இருக்கிறது. எங்களிடமிருந்து
உங்கள் நாட்டின் நிலை பற்றி நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள். குறிப்பாக உங்கள்
குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுப்பார்கள் என்று நீங்கள் நம்பித்
தேர்ந்தெடுத்தவர்கள் எப்படி நாட்டை நிர்வகிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து
கொள்கிறீர்கள். சமயங்களில் நீங்கள் கண்ணாடியில் பார்ப்பது நல்ல சொரூபமாக
இருக்காது. ஆனால் உங்கள் பாதுகாப்பான இருக்கைகளின் தனிமையில்
நீங்கள் புலம்பும் போது, உங்களுக்கு அந்தக் கண்ணாடியைத் தூக்கிக்காட்டும்
ஊடகவியலாளர்கள் அதை வெளிப்படையாகவும் பல ஆபத்துகளை எதிர்
கொண்டவாறும் செய்கிறார்கள். இது எங்களுடைய கடமை, அதிலிருந்து
நாங்கள் விலகுவதில்லை.

எல்லாப் பத்திரிகைகளுக்கும் ஒரு கோணம் இருக்கிறது. எங்களுக்கும்
இருக்கிறது என்பதை நாங்கள் மறைக்கவில்லை. இலங்கையை
வெளிப்படையான, தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயகமாகப் பார்க்க
வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள். இந்த வார்த்தைளைப் பற்றிக்
கொஞ்சம் யோசியுங்கள். அவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான, ஆழமான
ஒரு அர்த்தம் இருக்கிறது. வெளிப்படையாக இருக்க வேண்டிய காரணம்,
அரசு மக்களின் நம்பிக்கையைத் தவறாகப் பயன்படுத்தாததாகவும் மக்களுக்குப்
பதில் கூற வேண்டிய பொறுப்பை ஏற்றிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
மதச்சார்பற்றதாக இருக்க வேண்டியதன் தேவை, நம்மைப் போலப் பல
இனமக்களும் பல் கலாச்சாரங்களும் இணைந்திருக்கும் சமூகத்தில் நமது
ஒற்றுமையைக் காப்பாற்ற மதச்சார்பற்றதன்மையே பொதுத்தன்மையாக
இருந்து உதவும். தாராளவாதப் பண்பு இருக்க வேண்டியதற்குக் காரணம்,
எல்லா மனிதர்களும் வெவ்வேறான தன்மை கொண்டவர்கள் என்பதை
உணர்ந்து அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக்கொள்ள
வேண்டுமே தவிர நமது விருப்பத்திற்கு அவர்களை மாற்ற முயலக்
கூடாது. பிறகு ஜனநாயகத்தன்மை - அதை நான் உங்களுக்கு விளக்க
வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்தப் பத்திரிகையை
வாங்குவதை நிறுத்துவதே சிறந்தது.

தி சண்டே லீடர் பெரும்பான்மைக் கருத்தை மறுப்பேதுமின்றி வெளியிட்டுப்
பாதுகாப்பை நாடும் பத்திரிகை அல்ல. உண்மை என்னவென்றால் அதுதான்
பத்திரிகையை விற்பதற்கான வழி. அதற்கு நேர்மாறாகப் பல ஆண்டுகளாக
வெளிவரும் எங்களது கட்டுரைகள் எடுத்துக்காட்டுவதுபோலப் பலரால்
ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துகளையே நாங்கள் அதிகமும்
வெளியிட்டிருக்கிறோம். ஒரு உதாரணத்துக்கு, தொடர்ந்து நாங்கள்
பிரிவினைவாதப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்லி
வந்தாலும் அந்தப் பயங்கரவாதத்தின் அடிப்படைக் காரணங்களை
ஆராய வேண்டும் என்றும் நாங்கள் சொல்கிறோம். இலங்கையில்
நடக்கும் இனப்போராட்டத்தை வரலாற்றுப் பார்வையில் வைத்துப்
பார்க்க வேண்டும் என்றும் பயங்கரவாதமாக மட்டும் குறுக்கிப் பார்க்கக்
கூடாது என்றும் நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்தை வலியுறுத்தி
வந்திருக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்னும் பெயரில்
நடந்துவரும் அரசப் பயங்கரவாதத்தை எதிர்த்தும் நாங்கள் தொடர்ந்து
கலகம் செய்து வருகிறோம். தனது சொந்த மக்களைத் தொடர்ந்து
குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கைதான் என்ற எங்களது
அதிர்ச்சியை நாங்கள் ஒருபோதும் மறைத்ததில்லை. இப்படிப்பட்ட
பார்வை களுக்காக நாங்கள் துரோகிகள் என்று அழைக்கப் படுகிறோம்.
இது துரோகம் என்றால் நாங்கள் அந்தப் பட்டத்தைப் பெருமையாக
ஏற்றுக்கொள்கிறோம்.

தி சண்டே லீடருக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகப் பலர்
சந்தேகிக்கிறார்கள். எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை. நாங்கள்
எதிர்க்கட்சியைவிட அரசாங்கத்தைத் தீவிரமாக எதிர்ப்பதாகத்
தோன்றினால் அதற்கு ஒரு காரணம்தான். கிரிக்கெட் உதாரணத்தைக்
காட்டுவதற்காக மன்னிக்கவும் - பீல்டிங் சைடிற்குப் பந்து போட்டு
எந்தப் பிரயோஜனமும் இல்லை. யு.என்.பி. ஆட்சியிலிருந்த
காலகட்டத்தில் நாங்கள் அவர்களது ஊழல்களை வெளிப்படுத்தி
அவர்களுக்கு மிகப் பெரிய தொந்தரவாக விளங்கினோம். நாங்கள்
தொடர்ந்து வெளியிட்ட புலனாய்வுக் கட்டுரைகளே அந்த
அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று சொல்லலாம்.

எங்களது போர் எதிர்ப்பு நிலைப்பாடு புலிகளின் ஆதரவாகப் புரிந்து
கொள்ளப்படக் கூடாது. இந்த உலகில் இதுவரை தோன்றிய அமைப்புகளில்
மிகவும் பயங்கரமான ரத்தவெறி கொண்ட ஒரு அமைப்பு விடுதலைப்
புலிகள் அமைப்பே. புலிகளை ஒழிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு
மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தமிழர்களின் உரிமைகளை மீறி,
அவர்களைக் கருணையின்றிக் கொன்றுகுவிப்பது தவறு மட்டுமல்ல
சிங்களவர்களுக்கு அது அவமானமும்கூட. புத்த தம்மத்தின்
பாதுகாவலர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொள்வது இந்தக் காட்டு
மிராண்டித்தனத்தின் மூலம் என்றென்றைக்குமாகக் கேள்விக்குள்ளாகி
விட்டது. இதில் தடை காரணமாகப் பல விஷயங்கள் வெளிவருவதில்லை.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை ராணுவம் ஆக்கிரமிப்பதன்
மூலம் அங்கிருக்கும் தமிழ் மக்கள் தங்கள் சுயமரியாதையை இழந்து
இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ வேண்டிய நிலையையே ஏற்படுத்தும்.
போர் முடிந்ததும் அவர்களுக்கு 'வளர்ச்சி', 'புனர்கட்டமைப்பு' போன்றவற்றைத்
தந்து அவர்களைச் சாந்தப்படுத்த முடியும் என நினைக்காதீர்கள்.
போரின் காயங்கள் விட்டுச்செல்லும் வடுக்கள் என்றென்றைக்கும்
ஆறப்போவதில்லை. தவிரவும் புலம்பெயர்ந்த தமிழர்களின்
மேலதிக வெறுப்பையும் கசப்பையும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
அரசியல் தீர்வு மூலம் தீர்க்கப்படக்கூடிய ஒரு பிரச்சினை, ஆறாத
காயமாகி, தீரவே தீராத பிரச்சினையாக மாறிவிடும். எனக்கு ஏன்
இவ்வளவு கோபமும் பதற்றமும் என்றால் எனது தேசத்தின்
பெரும்பான்மையான மக்களால் - இந்த அரசாங்கத்தில் உள்ள
அனைவராலும் - மிகத் தெளிவான இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள
முடியவில்லை என்பதால்தான்.

நான் இரண்டுமுறை கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது பரவலாக
அறியப்பட்ட செய்தி. ஒருமுறை எனது வீட்டின்மீது மெஷின் துப்பாக்கி
குண்டு மழை பொழிந்தது. அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் இருந்தாலும்
இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி எந்த விசாரணையும்
நடக்கவில்லை; அவர்கள் பிடிக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்குதல்களில்
அரசாங்கத்தின் கை இருக்கும் என்று நம்புவதற்கு எனக்குக் காரணம்
இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும்போது, அரசாங்கம் தான்
அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும்.

பொதுமக்கள் அதிகம் பேர் அறியாத முரண்நகையான விஷயம்
என்னவென்றால் நானும் மகிந்தவும் கடந்த 25 ஆண்டு காலமாக
நண்பர்களாக இருக்கிறோம். அவரை இப்போதும் அவரது முதல்
பெயர் கொண்டு அழைக்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன்.
அவருடன் பேசும்போது சிங்கள 'ஒய' போட்டுப் பேசும் மிகச் சிலரில்
நானும் ஒருவன். அவர் பத்திரிகை ஆசிரியர்களுக்காக நடத்தும்
கூட்டங்களுக்கு நான் போகாவிட்டாலும் அவரைச் சந்திக்காமல்
ஒரு மாதமும் கழிவதில்லை. அதிபரின் இல்லத்தில் பின்னிரவு
நேரங்களில் மிக நெருங்கிய நண்பர்களுடனோ தனியாகவோ
நான் அவரைச் சந்திப்பது உண்டு. அங்கு நாங்கள் அரசியல்
விவாதங்கள் செய்வோம்; கதைகள் பேசுவோம்; பழங்காலத்தை
நினைவுகூர்ந்து மகிழ்வோம். அதனால் அவருக்குச் சில
விஷயங்கள் கூறுவது இங்கே பொருத்தமாக இருக்கும்.

மகிந்த, நீங்கள் 2005இல் ஜனாதிபதி வேட்பாளராக முந்தியபோது
இந்தப் பத்தியில் கிடைத்தது போன்ற ஆதரவு உங்களுக்கு வேறு
எங்கும் கிடைக்கவில்லை. எங்களது பத்து வருட காலச்
சம்பிரதாயங்களை மீறி நாங்கள் உங்களை முதல் பெயரிட்டு
அழைத்தோம். மனித உரிமைகளிலும் சுதந்திரம் சார்ந்த
விழுமியங்களிலும் உங்களுடைய பங்களிப்பு உயரியது என்பதால்
புதிய நம்பிக்கையாக உங்களை முன்மொழிந்தோம். ஒரு
தவறின் மூலம் நீங்கள் அம்பந்தோதா ஊழலுக்குத் துணைபோனீர்கள்.
பல உள்மனப் போராட்டங்களுக்குப் பிறகு நாங்கள் அந்த
ஊழலை அம்பலப்படுத்தினோம். அந்தப் பணத்தைத் திரும்பக்
கொடுக்குமாறு உங்களை வற்புறுத்தினோம். பல வாரங்களுக்குப்
பிறகு நீங்கள் அதைச் செய்தபோது, உங்களது பெயருக்குப்
பெரிய களங்கம் ஏற்பட்டிருந்தது. இன்னும் அதிலிருந்து உங்களால்
மீள முடியவில்லை.

அதிபர் பதவிக்கு நீங்கள் ஆசைப்படவில்லை என்று நீங்களே
என்னிடம் ஒருமுறை சொன்னீர்கள். அதன் பின்னால் நீங்கள்
போக வேண்டிய தேவை எழவில்லை. அது உங்கள் மடியில்
வந்து விழுந்தது. நிர்வாகத்தை உங்கள் சகோதரர்களிடத்தில்
விட்டுவிட்டு உங்களது வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சியான
உங்களது மகன்களுடன் நேரம் கழிப்பதே உங்களுக்குப்
பிடித்தமானது என்று என்னிடம் சொன்னீர்கள். இன்று எனது
மகன்களுக்கும் மகளுக்கும் தந்தை இல்லாத நிலையை
ஏற்படுத்தியிருப்பதில் உங்கள் நிர்வாகம் எப்படிச் சிறப்பாகச்
செயல்பட்டிருக்கிறது என்பது பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான
தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும்.
காவல் துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று
வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட
விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும்
வெளிவரப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்
எனது மரணத்துக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று நம்
இருவருக்குமே தெரியும். ஆனால் அவரது பெயரைச் சொல்லும்
தைரியம் இருக்காது. என் உயிர் மட்டுமல்ல உங்கள் பாதுகாப்பும்
அந்த மௌனத்தில்தான் இருக்கிறது.

உங்களுடைய இளவயதில் நமது நாடு பற்றி உங்களுக்கிருந்த எல்லாக்
கனவுகளையும் இந்த மூன்று வருடங்களில் நீங்கள் தவடுபொடி
ஆக்கிவிட்டீர்கள் என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு முன்பு எந்த
ஜனாதிபதியும் செய்யாத வகையில் தேசபக்தியின் பெயரால் நீங்கள்
மனித உரிமைகளைக் காலடியில் போட்டு மிதித்திருக்கிறீர்கள்;
ஊழலை வளர்த்தெடுத்திருக்கிறீர்கள்; பொதுமக்கள் பணத்தை
வீணடித்திருக்கிறீர்கள். பொம்மைக் கடையில் தனித்துவிடப்பட்ட
குழந்தையைப் போன்றது உங்கள் நடவடிக்கைகள். அந்த உதாரணம்
சரியானதல்ல. எந்தக் குழந்தையும் உங்களைப் போல இந்த மண்ணின்
மீது இவ்வளவு ரத்தம் சிந்தப்படுவதற்கான காரணமாகியிருக்காது;
குடிமக்களின் உரிமைகளை உங்களைப் போலக் காலடியில் போட்டு
மிதித்திருக்காது. இப்போது நீங்கள் அதிகாரத்தின் போதையில்
திளைப்பதால் உங்களால் இதைப் பார்க்க முடியாது. ஆனால்
எப்போதாவது உங்கள் மகன்களுக்கு நீங்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும்
ரத்தப் பாரம்பரியத்தை நினைத்து நீங்கள் வருத்தப்படுவீர்கள்.
அது சோகத்தை மட்டுமே தரும். என்னைப் பொறுத்தவரை நான்
என்னைப் படைத்தவனை மிகவும் தெளிவான மனத்துடனேயே
சந்திக்கப்போகிறேன். உங்களது நேரம் வரும்போது அதையே நீங்களும்
செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் விருப்பம்,
அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை நான் நிமிர்ந்து நடந்தேன், எந்த மனிதனுக்கும்
தலைவணங்கவில்லை என்ற மனநிறைவு இருக்கிறது. இந்தப்
பயணத்தை நான் தனித்து மேற்கொள்ளவில்லை. பிற ஊடகங்களைச்
சேர்ந்த சக ஊடகவியலாளர்களும் என்னுடன் நடந்தார்கள்.
அவர்களில் பலர் இறந்து விட்டார்கள், பலர் விசாரணையின்றிக்
கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், பலர் வெளிநாடுகளில் தஞ்சம்
புகுந்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் நீங்கள் கடுமையாகப்
போராடிய சுதந்திரத்தின்மீது உங்கள் பதவி வீசியிருக்கும்
மரணத்தின் சாயல்களுக்குள் சிலர் மெள்ள நடந்துகொண்டிருக்கிறார்கள்.
உங்களது கண்காணிப்பின் கீழ் எனது மரணம் நடந்தது என்பதை
நீங்கள் ஒரு நாளும் மறக்க முடியாது. நீங்கள் தீவிரமாக
வருத்தப்படுவீர்கள் என்பது எனக்குத் தெரியுமென்றாலும் என்னைக்
கொன்றவர்களைப் பாதுகாப்பதைத் தவிர வேறு வழி உங்களுக்கு
இல்லை என்பதும் எனக்குத் தெரியும். குற்றமிழைத்தவன்
தண்டனை பெறாமல் தப்பிக்க நீங்கள் ஆவன செய்வீர்கள். உங்களுக்கு
வேறு வழியில்லை. உங்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்;
அடுத்தமுறை சிராந்தி* பாவ மன்னிப்புக்கோரப் போகும்போது
நீண்ட நேரம் மண்டியிட வேண்டியிருக்கும். தனது பாவங்களுக்காக
மட்டுமல்ல, உங்களைப் பதவியில் வைத்திருக்கும் தனது பரந்த
குடும்பத்தின் பாவங்களுக்காகவும் பட்டியலிட்டு அவர் மன்னிப்புக்
கோர வேண்டியிருக்கும்.

தி சண்டே லீடரின் வாசகர்களைப் பொறுத்தவரை எங்களுடைய
கொள்கைகளுக்குத் துணை நின்றதற்காக நாங்கள் நன்றியைத்
தவிர வேறு என்ன சொல்ல முடியும். நாங்கள் அசௌகரியம்
ஏற்படுத்தும் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டோம்; நிற்கக்கூடச்
சக்தியற்றவர்களுக்கு ஆதரவாக உடன் நின்றோம்; தங்களது
வேர்களை மறந்துவிடக்கூடிய அளவுக்கு அதிகாரக்
கொழுப்பெடுத்தவர்களுடன் சண்டையிட்டோம்; ஊழல்களையும்
கடுமையாக உழைத்துச் செலுத்திய வரிப்பணத்தை நீங்கள்
வீணடித்த செயல்களையும் அம்பலப்படுத்தினோம். அந்தந்தக்
காலங்களில் என்ன பிரச்சாரம் நடந்ததோ அதன் மாற்றுக்
கருத்தையும் நீங்கள் அறிந்துகொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தோம். இதற்காக நானும் என் குடும்பமும்
இப்போது விலை கொடுத்திருக்கிறோம். இந்த விலையை நான்
கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை மிக நீண்ட காலமாக நான்
அறிந்திருந்தேன். இப் போதும் எப்போதும் அதற்குத் தயாராகவே
இருந்தேன். இந்த விளைவைத் தடுக்க நான் எதுவும் செய்யவில்லை.
எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையோ பாதுகாப்போ எடுத்துக்
கொள்ளவில்லை. மனிதக் கவசங்களின் பின் ஒளிந்துகொண்டு
ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கும்
தன்னைப் போல நான் பயந்தாங்கொள்ளி அல்ல என்பதை
எனது கொலைகாரன் தெரிந்துகொள்ள வேண்டும். கொலை
செய்யப்பட்ட அத்தனை பேருக்கிடையில் எனக்கு மட்டும்
என்ன தனி இடம்? எனது உயிர் பறிக்கப்படும் என்பது
தீர்மானிக்கப்பட்டது, யாரால் என்பதும்கூட. எப்போது என்பது
மட்டும்தான் இன்னும் எழுதப்படாமல் இருக்கிறது.

தி சண்டே லீடர் இந்த உண்மையான போராட்டத்தைத்
தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதும் முன்பே தீர்மானிக்கப்பட்டதுதான்.
ஏனெனில் இந்தப் போராட்டத்தை நான் தனியாக மேற்கொள்ளவில்லை.
தி சண்டே லீடர் அழிக்கப்படுவதற்கு முன் எங்களுள் நிறையப்
பேரைக் கொல்ல வேண்டியிருக்கும்; அவர்களும் கொல்லப்படுவார்கள்.
எனது மரணம் சுதந்திரத்தின் தோல்வியாகப் பார்க்கப்படக் கூடாது
என்று நான் விரும்புகிறேன்; எஞ்சி இருப்பவர்கள் தங்களது
முயற்சிகளை மேலும் உத்வேகப்படுத்த எனது மரணம் ஒரு
உந்துகோலாக இருக்க வேண்டும். நமது அன்பிற்குரிய தாய்நாட்டில்
தனி மனித விடுதலைக்கான ஒரு புதிய யுகத்தை உருவாக்குவதற்கான
சக்திகளை எனது மரணம் திரட்டும் என்று நான் நம்புகிறேன். தேச
பக்தி என்கிற பெயரில் எத்தனை உயிர்களைக் கொன்றாலும், மனித
உணர்வு தழைத்து நிற்கும் என்கிற உண்மையை உங்கள் அதிபருக்கு
அது உணர்த்தும் என்று எதிர்பார்க்கிறேன். எல்லா ராஜபக்சக்களும்
இணைந்து எதிர்நின்றாலும் அந்த உணர்வைக் கொன்றுவிட முடியாது.

இத்தனை ஆபத்துகளை நான் ஏன் எதிர் கொள்கிறேன் என்று மக்கள்
என்னைக் கேட்கிறார்கள். நான் விரைவில் கொல்லப்படுவேன் என்றும்
சொல்கிறார்கள். அது எனக்கும் தெரியும். அதைத் தவிர்க்கவும் முடியாது.
ஆனால் இப்போது நாம் பேசவில்லையென்றால் பேச
முடியாதவர்களுக்காகப் பேச யாருமே இருக்கமாட்டார்கள். அவர்கள்
சிறு பான்மையினராக இருந்தாலும் சரி, ஒதுக்கப்பட்டவர்களாக
இருந்தாலும் சரி, பழிவாங்கப்படுபவர்களாக இருந்தாலும் சரி.

எனது இத்தனை கால ஊடக அனுபவத்தில் என்னை மிக அதிகமாகப்
பாதித்தவர் ஜெர்மானிய ஆன்மிகவாதி மார்ட்டின் நெமில்லர். அவர்
இளம் பிராயத்தில் யூதர்களுக்கு எதிரானவராகவும் ஹிட்லரை
மிகவும் மதிக்கிறவராகவும் இருந்தார். நாஜியிசம் ஜெர்மனியை
முழுமையாகக் கைப்பற்றிய போதுதான் நாஜியிசம் என்றால்
என்ன என்பதை அவர் உணர்ந்தார். ஹிட்லர் யூதர்களை மட்டும்
வெளியேற்றவில்லை, மாற்றுக் கருத்துக்கொண்ட எல்லோரையும்
ஒழிக்க வேண்டும் என்று நினைத்தார். நெமில்லர் பிறகு பேசத்
தொடங்கினார். அந்தக் குற்றத்துக்காக அவர் 1937இலிருந்து 1945
வரை சாச்சென்ஹௌசன் மற்றும் டாச்சௌ வதை முகாம்களில்
அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட கொல்லப்பட்டார். நெமில்லர்
எழுதிய ஒரு கவிதையை நான் என் பதின்பருவங்களில்
முதன்முறையாகப் படித்தேன். எனது மனத்திலிருந்து அது
இப்போதும் விலகவில்லை.

முதலில் அவர்கள் யூதர்களுக்காக வந்தார்கள்.

அப்போது நான் பேசவில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல.

பிறகு அவர்கள் கம்யூனிஸ்டுகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளுக்காக வந்தார்கள்.

அப்போதும் நான் பேசவில்லை, ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் எனக்காக வந்தார்கள்.

அப்போது எனக்காகப் பேசுவதற்கு எவரும் இருக்கவில்லை.

வேறு எது நினைவில் இல்லையென்றாலும், இதை மறந்துவிடாதீர்கள்:
தி லீடர் உங்களுக்காக இருக்கிறது. நீங்கள் சிங்களராக, தமிழராக,
முஸ்லிமாக, தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராக, ஓரினச்சேர்க்கையாளராக,
அல்லது ஊனமுற்றவராக யாராக இருந்தாலும் சரி. இப்போது
நீங்கள் எதிர்பார்க்கும் அதே தைரியத்துடன் தி லீடரின் அலுவலர்கள்
உங்களுக்காக எந்தச் சமரசமும் செய்யாமல் யாரிடமும்
தலைவணங்காமல் பயப்படாமல் தொடர்ந்து போராடுவார்கள்.
இந்த உறுதியை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நாங்கள்
ஊடகவியலாளர்கள். எத்தகைய தியாகங்களைச் செய்தாலும்
அதைப் புகழுக்காகவோ பணத்துக்காகவோ செய்யவில்லை
என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். அவற்றை உங்களுக்காகவே
செய்கிறோம். நீங்கள் அத்தகைய தியாகங்களுக்குத் தகுதியானவர்தானா
என்பது வேறு விஷயம். என்னைப் பொறுத்தவரை, நான் முயன்றேன்
என்று கடவுளுக்குத் தெரியும்.

n

* சிராந்தி - ராஜபக்சேயின் மனைவி

1 comment:

  1. இதை அப்பிடியே நம்மூரு பத்திரிகைக் காரங்களுக்கு அனுப்பிவிடுங்கள்.

    ReplyDelete